கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முற்றிலுமாக முடங்கி உள்ள நிலையில், மலையாள நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைப் பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
ஊரடங்கு முடிந்த பிறகும் திரையரங்குகளில் படம் பார்க்க கூட்டம் வருமா.. என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார்கள் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டால் மட்டுமே இனிமேல், படம் தயாரிப்போம் என கேரள சினிமா தயாரிப்பாளர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவாதிக்க மலையாள சினிமா நடிகர்கள் சங்க (அம்மா) கூட்டம் கொச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில், நடிகர் மோகன்லால், சங்கத்தின் பொதுச்செயலாளர் இடைவேளை பாபு, துணைத்தலைவர்கள் முகேஷ், கணேஷ், நடிகர்கள் சித்திக், ஆசிப் அலி, நடிகை ரக்ஷனா உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தை 50% குறைப்பது என்று தீர்மானித்துள்ளனர்.
இதனிடையே கூட்டம் நடைபெற்ற ஓட்டல் அமைந்துள்ள சக்கரப்பரம்பு, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடம். இதனால் அங்கு நடிகர் சங்க கூட்டம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், நடிகர்களிடம் கூறியதையடுத்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த ஓட்டல் உடனடியாக இழுத்து மூடப்பட்டது.
முன்னதாக தமிழ் சினிமா துறையிலும் இதேபோல் சம்பளம் குறைப்பு கோரிக்கை தயாரிப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்று விஜய் ஆண்டனி உட்பட சில நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைக் குறைப்பதாக அறிவித்தனர். ஆனால், முன்னணி ஹீரோக்கள் இதுவரை எதுவும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: முகக்கவசம், சமூக இடைவெளி ஓராண்டிற்கு கட்டாயம்.. கேரள அரசு அதிரடி