சமீபத்தில் லடாக்கின் கிழக்கு பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லடாக் பகுதியை சமீபத்தில் பார்வையிட்டார். பின்னர் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வந்த ராணுவ வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

ராணுவ மருத்துவமனையில் புரெஜெக்டர் போன்ற பொருட்கள் இருந்ததை சுட்டிக்காட்டி சிலர் பிரதமர் சென்றது ராணுவ மருத்துவமனை கிடையாது, ஒரு கான்ஃபெரன்ஸ் ஹாலில் மருத்துவமனை போன்று செட் போட்டு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் விமர்சனங்கள் குறித்து இந்திய ராணுவம் அளித்துள்ள விளக்கத்தில், “இம்மாதிரியான விமர்சனம் என்பது தீங்கிழைக்கும் உள்நோக்கத்தோடு பரப்பப்படுகின்றது. 100 படுக்கைகளைக் கொண்ட இது பொது மருத்துவமனையின் விரிவாக்கப்பட்ட பகுதி. முன்பு ஆடியோ, வீடியோ அரங்காக இருந்த இந்த பகுதி கொரோனா தொற்று பரவலையடுத்து இந்த பகுதியை மருத்துவமனையின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கால்வானில் இருந்து வந்ததிருந்த வீரர்கள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றனர். முன்னதாக இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நாரவனே மற்றும் இராணுவத் தளபதியும் காயமடைந்த வீரர்களை இதே இடத்தில் தான் பார்வையிட்டனர்” என்றும் விளக்கமளித்துள்ளது.

மேலும் வாசிக்க: தமிழக பாஜகவிற்கு 10 துணைத் தலைவர்கள் நியமனம்.. 4 பிரபல நடிகைகளுக்கு முக்கிய பதவி