கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சரிந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ‘சுய சார்பு இந்தியா’ சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தார்.

அதுகுறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு நாளும் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்டு வருகிறார். கடந்த 13ஆம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசாங்க ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர் வைப்பு நிதி செலுத்துபவர்கள் உள்ளிடவர்களுக்கான 15 அம்ச திட்டங்களை அறிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க: ‘சுய சார்பு பாரதம்’- மோடியின் பலே திட்டங்கள்: விளக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

14ஆம் தேதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து தெரிவித்திருந்தார்.

15ஆம் தேதி விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 வகை திட்டங்கள் குறித்து அறிவித்தார். இந்நிலையில் இன்று அறிவித்துள்ளவை;

ஆறு விமான நிலையங்கள் ஏலத்தில் விடப்படும். 12 விமான நிலையங்கள் சரவதேச அளவுக்குத் தரம் உயர்த்தப்படும். மேலும் இந்திய வான் எல்லையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

நிலக்கரித்துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க திட்டம். முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

கனிம சுரங்கங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.

யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கேற்று நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கவும், அதை திறந்தவெளிச் சந்தைகளில் விற்கவும் வழிவகை செய்யப்படும்.

மேலும் வாசிக்க: தொடர்ந்து பலியாகும் புலம்பெயர் தொழிலார்கள்- கொரோனாவைவிட கொடுமை

ராணுவத் தளவாட உற்பத்தித்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிப்பு. இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தும் நிலை மாற்றப்பட்டு சுயசார்பு நிலை உருவாக்கப்படும். உள்நாட்டிலுள்ள ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும்.

புதுச்சேரி உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.

செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் அவற்றை ஏவுவது போன்றவற்றில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும். இஸ்ரோவின் உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும். உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்படும்.

மருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்படும், மருத்துவ துறையில் பயன்படும் கதிரியக்க தனிமங்களை உருவாக்குவதில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்று 4 ஆம் நாள் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரின் இத்தகைய அறிவிப்புகள் இந்தியாவையே தனியாருக்கு பங்கிட்டு விற்பதைப் போல இருப்பதாக பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், 8 முக்கிய துறைகள் தனியாரிடம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #IndiaforSale என்ற ஹெஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சமூக செயற்பாட்டாளர்கள் இந்த ஹெஷ்டேக் மூலம் தங்கள் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.