பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் சுமார் 6 மணி நேரம் முடங்கியதால், மார்க் சக்கர்பெர்க்கிற்கு ரூ.52,000 கோடி இழப்பு ஏற்பட்டு உலக பணக்காரர்கள் பட்டியலில், 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திடீரென நேற்றிரவு (04-10-2021) முடங்கியது. இதனால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். ஏதோ ஒரு தவறு நடந்துள்ளது. விரைந்து இந்த சிக்கலை சரிசெய்வோம் என பேஸ்புக் தெரிவித்தது. சமூக வலைத்தள முடக்கத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கோரியது.

இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் இன்று அதிகாலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியதால் சமூக வலைதள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர்.

பயனாளர்களுக்கு சில மணி நேர தடை தான் என்றாலும், இந்த திடீர் முடக்கம் காரணமாக மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே இரவில் கடும் சரிவை கண்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்குக்கு 7 பில்லியன் டாலர் (52,000 கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அவரின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில், 3வது இடத்தில் இருந்த மார்க் சக்கர்பெர்க், தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல, பேஸ்புக்கின் மதிப்பும் நேற்று ஒரே இரவில் 4.9 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 15 சதவீதமாக சரிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சரிவுக்கு தொழில்நுட்ப கோளாறு மட்டுமே காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. பேஸ்புக் முன்னாள் ஊழியர் பிரான்சஸ் ஹவ்கேன் என்பவர் அமெரிக்கா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பேஸ்புக் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்ததும் சரிவுக்கு காரணம் என்கின்றனர்.

ஹவ்கேன் ஏற்கெனவே பேஸ்புக் தவறுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக பேஸ்புக்கின் நம்பகத்தன்மை கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதுகுறித்து விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.