அதிவிரைவாக பரவக்கூடிய ஸ்பானிஷ் ப்ளூ போன்ற மற்றொரு கொள்ளைநோய் உலகில் பரவக்கூடும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். எனவே பில்கேட்ஸ் தான் கொரோனா உலகம் முழுவதும் பரவ காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் குற்றம்சாட்டியுள்ளார்.
2015ல் டெட் உரை அரங்கில் புதிதாக தோன்றக்கூடிய கொள்ளை நோய்கள் பற்றி பில்கேட்ஸ் விரிவாகப் பேசினார். அவரது உரையில் அணு ஆயுத பரவல் தடைக்கு எதிராக நாம் ஏராளமாக முதலீடு செய்திருக்கிறோம். ஆனால் கொள்ளை நோயாக மாறக்கூடிய நுண்ணுயிர் பரவலை தடுக்க நாம் இன்னும் தேவையான அளவு செலவழிக்கவில்லை.
நமக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய கொள்ளைநோய் இயற்கையில் இருந்து நுண்ணுயிர் கிருமிகள் வடிவில் பரவக்கூடும். உதாரணமாக எபோலா வைரஸ் காட்டிலிருந்து குரங்குகள் மூலமாகவும் வெளவால்கள் மூலமாகவும் மனிதருக்கு பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயற்கையான தினசரி நடவடிக்கைகள் மூலமாக கொள்ளை நோய் பரவக்கூடும்.
தொற்றுநோய்களால் சுகாதார பேரிடர் ஒரு இடத்தில் தோன்றும் பொழுது களத்தில் இறங்கிப் பணிகளை நிறைவேற்ற சுகாதார போர்வீரர்கள் தேவை. மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் திறமையும் அனுபவமும் உடைய சுகாதாரப் போர் வீரர்கள் அடங்கிய படைப்பிரிவு ஒன்றை நாம் உருவாக்கி தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மேலும் இதனால் ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பதற்கு /குறைப்பதற்கு நாம் அடிப்படை சுகாதாரப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் அத்துடன் புதிய வகை வைரஸ் தொற்றுகளுக்கான ஆய்வுகள்
மேற்கொள்ளபட வேண்டும். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நாம் உலக அளவில் ஏற்படும் மரணங்களை குறைக்கமுடியும் என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் நேரடியாக பில்கேட்ஸ் மீது புகார் வைத்துள்ளார். இந்த வைரஸ் பரவியதிலும் அது உருவானதிலும் பில்கேட்சுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நான் சொல்லும் கருத்தை சிலர் தவறு என்றும், சிலர் சரியென்று சொல்வார்கள். ஆனால் நான் சொல்வதை விவாதம் செய்தே ஆக வேண்டும்.
பில்கேட்ஸ் மற்றும் சில பணக்காரர்கள் மருந்துகளை விற்பனை செய்யவும், மக்கள் கையில் மைக்ரோசிப்களை பொருத்தவும், அவர்களை எப்போதும் கண்காணிக்கவும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர் என்று நம்புகிறேன். இதனால்தான் கொரோனா பரவுகிறது என்று நான் நினைக்கிறேன். என் உயிரே போனாலும் நான் தடுப்பூசிகளை போட மாட்டேன், என்று ரோஜர் குற்றம் சாட்டியுள்ளார்.
உலகம் முழுக்க தடுப்பூசிகளை எதிர்க்கும் குழுக்கள் நிறைய இருக்கிறது. ரோஜர் அதேபோல் அமெரிக்காவில் தடுப்பூசிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதனால் தற்போது கொரோனா தடுப்பூசிகளை எதிர்க்க தொடங்கி உள்ளார். ரோஜர் ஸ்டோனின் புகாருக்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கியுள்ளார். கொரோனாவை தடுப்பதற்காக மொத்தம் 7 நிறுவனங்கள் தனி தனியாக மருந்துகளை கண்டுபிடிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்கள் முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தற்கு, உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பில்கேட்ஸ்ம் தனது பதிவில், உலகமே சுகாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நேரத்தில் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்துவது மிகவும் ஆபத்தானது. இது கொரோனா வைரஸ் பரவலைக் குறைத்து வரும் வேலையை தாமதப்படுத்தும் என்று கூறியதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.