மாநிலத்திற்குள் விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது பஞ்சாப் மாநில அரசு.
மத்தியப் புலனாய்வுத் துறையின் அதிகார வரம்பு, டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi Special Police Eshtablishment – DSPE 1946) மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல்துறைக்கு இருக்கும் அதே அதிகாரங்களையும் பொறுப்புகளையும் சிபிஐக்கும் வழங்குகிறது.
டெல்லியைத் தவிர, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சிபிஐ, தனது அதிகாரத்தைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசின் பொது ஒப்புதல் (General Consent) பெற்றிருப்பது அவசியம். சிபிஐக்குப் பொது ஒப்புதல் மறுக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் சிபிஐ வழக்கு விசாரணை செய்ய மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகியவை சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை ஏற்கெனவே திரும்பப் பெற்றிருக்கின்றன. இதையடுத்து சமீபத்தில் மகாராஷ்ட்ரா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் சிபிஐ வழக்கு விசாரணை செய்வதற்கான அனுமதியை ரத்து செய்தன.
இப்பட்டியலில் தற்போது பஞ்சாப் மாநிலமும் இணைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்குள் விசாரணை நடத்த சிபிஐ அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது பஞ்சாப் மாநில அரசு.
இதனால் பஞ்சாப் மாநிலத்தில், எதிர்காலத்தில் மத்தியப் புலனாய்வுத் துறையால் நடத்தப்படும் எந்தவொரு வழக்கு விசாரணைக்கும் பஞ்சாப் மாநில அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே விசாரணை மேற்கொள்ள முடியும்.
பாஜக மோடி அரசு மத்திய புலனாய்வுத் துறையின் அதிகாரங்களை எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் அடுத்தடுத்து சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது அதிகாரத்தை திரும்ப பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.