நடிகர் கமலஹாசன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியின் மூலம் கூறிய பல்வேறு அரசியல் கருத்துகள், தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தின. இதனால், அரசியல்வாதிகள் கமல் மீது பல்வேறு எதிர் கருத்துகளை தெரிவித்தனர். இதன் இறுதியில், நடிகர் கமலஹாசன் “மக்கள் நீதி மய்யம்” என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அரசியல்வாதியாக மாறினார்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், அரசியலில் களமிறங்க கனவு காணும் நடிகர்களில் முக்கியமானவராக கருதப்படும் நடிகர் விஷால், சன் டிவியில் “சன் நாம் ஒருவர்” என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒலிபரப்பாகிறது.
இதனிடையே, நடிகர் விஷாலின் நெருங்கிய தோழியான வரலட்சுமி சரத்குமார், நடிகர் விஷாலுக்கு போட்டியாக ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் “உன்னை அறிந்தால்” என்ற சமூகம் சார்ந்த விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் 14 ஆம் தேதி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப் போல இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான புரமோ வீடியோவை வரலக்ஷ்மி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர்கள் பலர் அரசியலில் நேரடியாக இடம்பெற்று வரும் நிலையில், பிரபல சினிமா நடிகர்கள் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா மட்டும் அல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது, மக்களிடம் நேரடியாக பேசுவது, மக்கள் தன் மீதான அபிப்பிராயத்தை மேம்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது. அதனால் அரசியலில் எளிதாக நல்ல பெயர் வாங்க முடியும் என சிலர் கணக்கிடுவதாக கூறப்படுகிறது.