மோரீஷஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி புதன்கிழமை காலை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து, குமரகோட்டம் முருகன் கோயில், காமாட்சியம்மன் கோயில்களுக்குச் சென்றார். அப்போது, அவரை அறநிலைத்துறை அலுவலர்கள், சிவாச்சாரியர்கள் வரவேற்று, சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். சென்ற முறை பிப்வரி மாதத்தில் இவர் திருப்பதி சென்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் ரமசிவம் பிள்ளை வையாபுரி மோரீஷஸ் துணை அதிபர் கூறியதாவது தமிழ் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள புதுச்சேரிக்கு வருகை தந்து, பல்வேறு தமிழ் வளர்ச்சி நல அமைப்பினர்களை சந்தித்தேன். இதைத்தொடர்ந்து, கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்துக்கு புதன்கிழமை வந்தேன். தமிழக சகோதர, சகோதரிகள் எனக்கு சிறப்பானதொரு வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இது மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன், எனது முன்னோர்களையும் நினைவு கூருகிறது. கடந்த 150-200 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்திலிருந்து மோரீஷஸ் நாட்டுக்கு எனது முன்னோர்கள் குடியேறினர். குறிப்பாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலிருந்து திரளானோர் மோரீஷஸ் நாட்டு கரும்புத் தோட்டங்களில் பணிபுரிந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். அந்த உழைப்பின் காரணமாக மோரீஷஸ் நாடு தற்போது வளமிக்கதாக மாறியுள்ளது.

இந்த வளத்துக்கு, தமிழக, இந்திய கலாசார பாரம்பரியம் உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், மோரீஷஸ் நாட்டில் தமிழ், தெலுங்கு, போஜ்பூரி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகள் அடிப்படை புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக, தமிழர் கலாசாரம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தமிழர்களின் நல்லுறவை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், இந்திய மோரீஷஸ் நாடுகளின் நட்புறவு தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றார்.