நடிகா் அஜீத்தை விமா்சனம் செய்யும் வகையில் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டது குறளரசன் கிடையாது என்று டி.ராஜேந்தா் விளக்கம் அளித்துள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீா் உள்ளிட்ட படங்களை இயக்கியவா் சுசீந்திரன். இவா் அஜீத்தை அரசியலுக்கு வரச்சொல்லி சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தாா். அதை பார்த்த தல ரசிகர்கள் அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என்றார்கள்.

அப்பதிவில், “40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்மே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இது தான் 100 சதவிகிதம் சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலக்கோடி மக்களில் நானும் ஒருவன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இக்கருத்தை மையப்படுத்தி சிம்புவின் தம்பி குறளரசன் முகநூல் பக்கத்தில் அஜீத்தை கேலி செய்து கருத்தை பதிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த பதிவு குறளரசன் என்ற பெயருக்கு பதிலாக குரான் அரசன் டி.ராஜேந்தர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

பதிவில், “உண்மை சில நேரங்களில் அற்ப நகைச்சுவையாகத் தோன்றும். தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும். எங்க அப்பா முதல்வர் ஆவார்” என்றும் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மகன் பெயரில் ட்வீட் வெளியானதை பார்த்த டி. ராஜேந்தர் அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விளக்கம் அளித்துள்ளார். “நானோ, என் மகன் குறளரசனோ ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கவில்லை. பிரபலங்களின் சமூக வலைதள கணக்கில் ப்ளூ டிக் இருந்தால் மட்டுமே அது அவர்களின் கணக்கு என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

பலர் பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு துவங்கி அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் என் இளைய மகன் குறளரசனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே குரான் அரசன் என்ற போலி பெயரில் ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளனர். என் இளைய மகன் குறளசரனுக்கும், அரசியலுக்கும் தொடர்பே இல்லை. அவர் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞன் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த போலி கணக்கு வைத்துள்ளவர் மீது போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன். குறளரசன் எந்த ட்வீட்டும் செய்யவில்லை என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.