சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்பட பல்வேறு துறை பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய தனியார் அமைப்பின் இயக்குனர் ராஜு ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் கலையரங்கில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. அதில் சினிமா உட்பட பல்வேறு துறை பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை அந்த தனியார் அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் செய்திருந்தார். இசை அமைப்பாளர் தேவா, நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர் உட்பட 40 பேருக்கு கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலு விழாவுக்குச் செல்லாத நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வீடு தேடிச் சென்று வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்பட வேண்டிய கௌரவ டாக்டர் பட்டங்கள், தனியார் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைகழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், தனது கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

அந்த புகார்களின் பேரில் ஹரிஷ் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கிய நிலையில், அவர் தலைமறைவானார். மேலும் இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “படிக்க இயலாதவர்களுக்கு கல்வி வழங்குவது, மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவவது போன்ற பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறோம். அப்படிதான், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியையும் நாங்கள் நடத்தினோம்.

அந்த நிகழ்ச்சிக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பு இல்லை. அதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் தொடர்பு இல்லை. என் மீது தவறாக மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர நான் தயாராக இருக்கிறேன். எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என ஹரிஷ் கோரியிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு நேற்று (5.3.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி, அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி அளித்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது என்றும் வாதிட்டார். காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரிய ராஜு ஹரிஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஆம்பூரில் பதுங்கி இருந்த ஹரிஷை தனிப்படை காவல்துறை இன்று (5.3.2023) கைது செய்துள்ளனர்.