சர்கார் படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாக, தொடரப்பட்ட வழக்கில் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அரசை விமர்சித்து படம் எடுக்கக் கூடாது என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று முருகதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். மன்னிப்பு கேட்க மறுத்த முருகதாஸ் முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில், “சர்கார் படத்தை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர், தனி நபரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எப்படி செயல்பட முடியும்.. ஏன் செயல்படுகிறீர்கள்.

இதில் என்ன உள்நோக்கம் உள்ளது. ஒரு திரைப்படம் என்றால், அதை திரைப்படமாகவே பார்க்க வேண்டும். ஒருவேளை படத்தில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் ஏதாவது இடம் பெற்றிருந்தால், அந்த காட்சிகளை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

அனைவரும் படத்தை பார்த்த நிலையில், தனி நபர் கொடுத்த புகாரின் பேரில், மதம், இனம், மொழி சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டியதாக இயக்குனர் முருகதாஸ் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்.

அரசின் கொள்கைகளுக்கு பொதுமக்கள் எதிர் கருத்து தெரிவிக்கக்கூடாதா. அரசை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்காலத்தில் அரசை விமர்சித்து படம் எதுவும் எடுக்கக்கூடாது என்று இயக்குனரிடம் உத்தரவாதம் கேட்பது என்பது, அவரை அரசு மிரட்டுவதற்கு சமம்” என கேள்விகளை தமிழக அரசிடம் எழுப்பி உள்ளனர்.

தொடர்பு செய்திக்கு: விடாது துரத்தும் சர்க்கார் சர்ச்சை – ஏ.ஆர் முருகதாஸ் மீது வழக்குப்பதிவு