முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த கடலூர் திமுக எம்.பி ரமேஷை 2 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் திமுக மக்களவை உறுப்பினராக இருப்பவர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். பண்ருட்டி அருகே பனிக்கன் குப்பத்தில் இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் 19 ஆம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கோவிந்த ராசுவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கோவிந்தராசுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கோவிந்தராசுவின் மர்ம மரணம் வழக்கு கொலை வழக்காக சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி, காவல் ஆய்வாளர் தீபா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ரமேஷ் தவிர 5 பேரை கடந்த 9 ஆம் தேதி காலை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், எம்.பி ரமேஷ் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று (11.10.2021) எம்.பி ரமேஷ் பண்ருட்டி குற்றவியல் முதன்மை நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி முன்பு சரணடைந்தார். அவரை அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் கற்பகவள்ளி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இதுகுறித்து எம்.பி ரமேஷ் இன்று (11.10.2021) வெளியிட்ட அறிக்கையில், “சிபிசிஐடி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து திமுக மீது அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரசாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது.

ஆகவே நான் உயிரினும் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி பேசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்து விட வேண்டாம் என கருதி சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.