உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். ஆனால், அவர்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது.
சபரிமலைக்குப் பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் வரும் வாகனங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கேரள போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில், நிலக்கல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் என்பவர் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பம்பா காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார்.
ஆனால், தான் எந்த பெண் மீதும் தாக்குதல் நடத்தவில்லை எனவும், அப்பகுதியில் இருந்து மாற்று திசையில் சென்றுகொண்டிருந்த தன் மீது கேரள போலீஸார் வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்துள்ளதாக ராகுல் ஈஸ்வர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும் சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1500-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை செல்லும் பாதைகளில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் பம்பை அடிவார முகாம் பகுதியில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது போராட்டக்காரராகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு உண்டானது.
அதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அவர்களைக் கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த வன்முறை மற்றும் தடியடியில் 5 கலவரகரார்கள் , 15 போலீசார் காயமடைந்ததாகவும், 10 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கேரள அமைச்சர் ஜெயராமன் கூறினார்.
இந்த வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்றும், போராட்டத்தின் பின்னணியில் அவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயராமன் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
இன்னொரு பேட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்று கேரள அமைச்சர் கே .கே.சைலஜா தெரிவித்துள்ளார். சபரிமலை போராட்டம் உள்நோக்கம் கொண்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல. ஏன் என்றால் இறைவனின் முன்னால் ஆன் பெண் என்ற வேறுபாடு கிடையாது. அவர்கள் எவ்வாறு அங்கு பெண்களைத் தாக்கலாம்?
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க அரசியலே உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.