பாஜகவில் இணைந்த அண்ணாமலை உட்பட பாஜக பிரமுகர்கள் 5 பேர் மீது ஊரடங்கு சட்டத்தை மீறுதல், நோய்பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பிறகு கோயம்புத்தூர் சென்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, இளைஞர்கள் பாஜகவிற்கு அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் எப்படி இத்தனை நிர்வாகிகள் ஒன்றிணைந்தார்கள் என்ற சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து ஊரடங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக கோவை காட்டூர் காவல்துறையினர், அண்ணாமலை உட்பட தமிழக பாஜக கோவை மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 143, 341, 269, 285 மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 3இன் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுதல், நோய்பரப்பும் வகையில் செயல்படுதல், ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல் மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய ஐந்து குற்றங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க: தமிழகத்தில் ஊடரங்கை மீறியதாக ரூ.21.80 கோடி அபராதம் வசூல்- பொதுமக்கள் வேதனை