அதிமுகவில் இடைவெளி வரும், அதில் நுழைந்துவிடலாம் என எதிர்பார்ப்பவர்களின் கனவு பலிக்காது என சசிகலாவை குறி வைத்து அமைச்சர் உதயகுமார் தாக்கியதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறிய விவரம் பின்வருமாறு
வேளாண் மசோதாவில் விவசாயிகளை பாதிக்கும் எந்த அம்சமும் இல்லை. ஆகவே, விவசாயிகளிடம் வேளாண்மை மசோதாவின் நம்மைகளை அரசின் சார்பில் எடுத்து செல்வோம்.
தற்போது பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் குறைந்த அளவு போக்குவரத்து மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க படிப்படியாக கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மருத்துவகுழு, வல்லுநர் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அளிக்கும் ஆலோசனையின்படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான சூழல் எழவில்லை. இப்போதுள்ள தளர்வுகளே தொடர்ந்து நீடிக்கும்.
அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் எவ்வாறு செயற்குழு கூட்டம் நடந்ததோ, அதேபோன்று ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுத்து இந்த செயற்குழு கூட்டம் இருக்கும்.
தேவைப்பட்டால் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டி குழு அமைக்கப்படும். அதேநேரம், அதிமுகவில் இடைவெளி ஏற்படும், அதில் நாம் எப்பொழுது நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் (சசிகலா) கனவுகள் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.