கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அருண் கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இந்து முன்னணி நிர்வாகிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மை காலமாக தந்தை பெரியார் சிலை, அன்னை மணியம்மையார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்டால் உடனடியாக அதனை சீரமைத்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் இப்படி அவமதித்தனர் என்று கூறப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக கடும் அதிருப்தி வெளியிட்டிருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அது என்ன பெரியார் சிலை மட்டுமே மனநோயாளிகளின் கண்களுக்கு தெரிகிறது? எது என்ன காவி சாயம் மட்டுமே பெரியார் சிலைக்கு பூசப்படுகிறது? என கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, பெரியாரை அவமதிக்கும் இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கோவை வெள்ளலூரில் திராவிடர் கழகத்துக்கு சொந்தமான தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்தின் நுழைவுவாயிலில் தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது.
இந்த சிலையை கடந்த 8 ஆம் தேதி இரவு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், தலைப் பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திராவிட இயக்கங்கள், திராவிட கட்சிகள் கோவை, வெள்ளலூர் ஆகிய இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.
மேலும் திராவிடர் கழகம், மதிமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இத்தகைய தொடர் அவமதிப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் நள்ளிரவில் 2 பேர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது தெரியவந்தது. அதை வைத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்தது இந்து முன்னணி நிர்வாகிகள் அருண் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் ஜனவரி 10 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்த சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகிகள் அருண் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை மூலம் தலைவர்கள் சிலைகளை உடைக்கும் சமூகவிரோதிகள் இனி அச்சப்படுவர் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.