கோயில்களில் உரிமக் காலம் முடிந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கல்யாண சுந்தரம் என்பவர் கோவில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவல்லி அமர்வு, இந்து கோவில் வளாகத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை 6 மாதத்தில் மீட்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.
இதனிடையே கோவில் சொத்துகளை அடையாளம் கண்டு கோவில்களுடன் இணைக்க 6 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் ஒவ்வொரு கோவிலின் முன்பும் அந்த கோவிலின் சொத்து மதிப்பை விளம்பர பலகையில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது .
அனைத்து கோவில்களின் சொத்து விவரங்களை, பொதுமக்களுக்கு தெரியும்படி கோவில் கல்வெட்டில் செதுக்கி வைக்க வேண்டும்.கோயிலில் ஒவ்வொரு பூஜைக்கும் உரியக் கட்டணம் பற்றி அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்,எந்தெந்த பூஜைக்கு எவ்வளவு பிரசாதம் வழங்கப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளை நீதிமன்றம் விதித்துள்ளது
இதனிடையே திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர, பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்களில் நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்பட்டதா என்பதை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தேவையான அடிப்படை வசதிகளை 6 மாதத்திற்குள் பூர்த்தி செய்து, மீண்டும் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. கோவில்களில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 6 மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.