தமிழர்களின் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்றான கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு
கிடைத்திருப்பது, கரிசல் மண்ணுக்கு மகுடம் என்று வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கரிசல் மண் நிறைந்தவை. இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலைகள் தனி சிறப்பு வாய்ந்தவை. இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் உள்ள இந்த நிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கீழ் புவிசார் குறியீடு பதிவகம் வெளியிட்டுள்ள பட்டியலில் கோவில்பட்டி கடலைமிட்டாய், மணிப்பூர் கருப்பு அரிசி, உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் டெரகோட்டா ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு என ஏற்கனவே 34 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 35-வதாக கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கான முன் முயற்சியை எடுத்தவர் தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியரான விஜய கார்த்திகேயன். 2014-ல் கோவில்பட்டி துணை ஆட்சியராக இருந்த போது அவர் மேற்கொண்ட முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது.
மேலும் வாசிக்க: பொருளதார நிபுணர் , முன்னாள் RBI கவர்னர் உடன் ராகுல் காந்தி பேசியது என்ன
புவிசார் குறியீடு என்பது குறிப்பிட்ட தயாரிப்பு பொருளின் பாரம்பரியமான தரத்தை அங்கீகரிப்பதாகும். இதற்கு என தனியாக முத்திரையுடன் கூடிய வாக்கியம் வழங்கப்படும். இந்த புவிசார் குறியீடு உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். எந்த ஒரு தனிநபருக்கும் புவிசார் குறியீடு வழங்கப்படவும் மாட்டாது. இதனால் போலி தயாரிப்புகள் தடைபடும்.
இனி கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் பிற ஊர்களில் கடலைமிட்டாய் தயாரிக்கப்பட்டால் அதில் இந்த புவிசார் குறியீடு லோகோ இடம் பெறாது. இதன் மூலம் அந்த பொருட்கள் போலி என்பது தெரிந்துவிடும். மேலும் புவிசார் குறியீட்டுடன் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் உயரிய மதிப்பும் உண்டு. மேலும் தமிழகத்தின் பாரம்பரிய பொருட்கள் பலவற்றுக்கும் புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.