இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில், சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். கதிர் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். தமிழ் சமூகத்தில்பல நூறு ஆண்டுகளாக வேரூன்றியிருக்கும் சாதியத்தின் கொடூரமான முகத்தை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டியிருக்கும் படம்தான் பரியேறும் பெருமாள். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து, படமும் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், பரியேறும் பெருமாள் திரைப்படம் 16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. 59 நாடுகளில் இருந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்ற படங்கள் உள்பட 150 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ் படங்கள் போட்டி பிரிவில் 12 படங்கள் பங்கேற்கின்றன.

தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாசார மையம் ஆகியவற்றில் இந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இதில், பரியேறும் பெருமாள் திரைப்படமானது நாளை மாலை 6 மணிக்கு ரஷ்ய கலாசார மையத்தில்திரையிடப்படுகிறது.

முன்னதாக, கோவாவில் நடைபெற்ற 49வது சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் ‘பரியேறும் பெருமாள்’ படம் திரையிடப்பட்டது. இது சமூகத்தின் முக்கியப் பிரச்சனையை பேசியுள்ளதாகவும், உணர்வுப்பூர்வமான பிரச்சனையை எடுத்துரைத்துள்ளதாக பாராட்டப்பட்டது. பல்வேறு மாநில பார்வையாளர்கள், சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.