காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியாக இசைஞானி இளையராஜா எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மீது தொடர்ந்த வழக்கை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நான் 2014-ல் எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய தொடர்ந்த வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்த தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன். சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சி.டி.க்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.

அதில் நீதியரசர், எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு சில செய்தி நிறுவனங்கள் ‘இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து’, ‘இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி’ என தவறான செய்திகள் வெளியிடுகின்றனர். தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றும் இளையராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்பு செய்திக்கு: இசையால் தான் சாதாரண பாடல் வரிகள் புகழை பெறுவதாக இளையராஜா சர்ச்சை பேச்சு