உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பு நாடுகளும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கை குறித்து சுதந்திரமாக விசாரணை செய்ய ஒப்புக் கொண்டுள்ளன.
உலக சுகாதார அமைப்புக்கு உலகிலேயே அதிகமான நிதியுதவி வழங்கும் நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப், WHO சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவி வருவது தொடர்பான செய்திகளை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. மேலும், சீனாவைத் தொடர்ந்து பாராட்டி வருவம் உலக சுகாதார அமைப்பு, சீனத் தலையீடு எதுவும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதாக காட்டினால் மட்டுமே அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து இயங்கமுடியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும் வாசிக்க: உலக சுகாதார அமைப்புக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அதிபர் ட்ரம்ப்
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பு நாடுகளும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுத்த நடவடிக்கை குறித்து சுதந்திரமாக விசாரணை செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான தீர்மானத்தை 100 நாடுகள் சார்பில் ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தது.
கொரோனா தொடர்பாக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள், ‘பாகுபாடற்ற வகையில், சுதந்திரமாக மற்றும் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்’ என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் எடுத்த நடவடிக்கை மட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.