கொரோனா விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தாவிட்டால் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதி, நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகையே இன்று அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா நோய்த் தொற்று, சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் பரவியதாக அமெரிக்கா தொடக்கம் முதலே குற்றஞ்சாட்டி வருகிறது. நோய்த் தொற்று பரவல் குறித்து சீனா உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொற்று விலங்குகளில் இருந்து பரவியதாக தெரிவித்தது. இதையடுத்து, சீனாவிற்கு ஆதரவாக நடந்து கொள்வதாக கூறி, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் பக்கங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அக்கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் உலக சுகாதார நிறுவனத்தின் திறமையின்மை, சீனாவுடனான நெருக்கம் காரணமாக தொற்றின் பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்க தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க: இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து.. அரபு நாடுகளை தொடர்ந்து கனடாவிலும் சர்ச்சையில் சிக்கிய இந்தியர்கள்

தொற்று நோய் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான வழிநடத்தலுக்கு உலகம் மிகப்பெரிய விலை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சீனாவை விட்டு விலகி நின்று உரிய விசாரணை நடத்த வேண்டியதே உலக சுகாதார அமைப்பிற்கு ஒரே வழி என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொடர்பாக அடுத்த 30 நாட்களுக்குள் உலக சுகாதார அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தற்காலிக நிதி முடக்கத்தை நிரந்தரமாக்குவேன் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதனிடையே கொரோனா தொடர்பான விவகாரத்தில் மறுஆய்வு செய்ய உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.