கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்ய முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று (ஜூன்.24) காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகிற 25.6.2020 முதல் 30.6.2020 வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட காலத்தில், பொதுப் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும். மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவு கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாகனப் போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. இதனால் மக்களின் பயணங்களை தடுக்க இயலவில்லை என்ற மாவட்ட ஆட்சியர்களின் கருத்து ஏற்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் திட்டம்?