கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னை மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வீட்டிலே தங்க மருத்துவமனைகள் அறிவுறுத்தி வருகிறது என்ற தகவல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 33229 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சென்னையில் மட்டும் 23298 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தினந்தோறும் மாநிலத்தில் 1000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லை எனக் கூறி, வீட்டிலே இருக்கும்படியும் தனியார் மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை வைப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதே நிலை பல அரசு மருத்துவமனைகளிலும் உருவாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரும், நடிகருமான வரதராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனக்கு நெருக்கமான நண்பர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சு விடச் சிரமப்பட்டு வரும் நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவமனை சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி இல்லை எனக் கூறி சிகிச்சை அளிக்க மறுக்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
வரதராஜன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. அந்த வீடியோவை மேற்கோள்காட்டி பலர், தங்களுக்கு நெருக்கமானவர்களும் இதேபோல் கஷ்டப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் வாசிக்க: 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன்.15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது- உயர்நீதிமன்றம் அதிரடி
இதனை மறுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில்; சென்னையில் படுக்கை வசதி பற்றாக்குறை என தவறான தகவலை மக்களுக்கு அளித்த நடிகர் வரதராஜன் மீது பேரிடர் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்று நடிகர் வரதராஜன் கூறியது தவறானது.
அரசைப் பாராட்டவில்லை என்றாலும், குற்றச்சாட்டை சொல்வதற்கு முன்பு யோசிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த முதற்கட்டமாக 30 மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முன்னதாக டெல்லியில் இதே நிலை நீடிப்பதால் கர்ப்பிணி ஒருவர் ஆம்புலன்சில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளித்தது. இதேபோல் மருத்துவமனைகள் மக்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவதால் பலர் உயிரிழக்கும் அவலம் ஏற்படலாம். இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து மக்களுக்குத் தடையின்றி சேவை நடக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.