கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மதுரை மாவட்டம் முழுவதும் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது, மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக, சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களிலும், தினசரி, கொரோனா எண்ணிக்கை 1000த்தை தாண்டி வருகிறது.
புள்ளிவிவரப்படி, இன்று சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1487 ஆக உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 50 % அளவுக்கான கொரானா பாதிப்பு சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 705 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பால் மதுரையில் நாளை காலை 6 மணி முதல் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ள சென்னை உட்பட நன்கு மாவட்டங்களில் பின்பற்றப்படும் ஊரடங்கு நடைமுறைகளே இந்த பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது.
இவ்வாறு பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பிற்கு முக்கியமான காரணம், கடந்த பல வாரங்களாக சென்னையில் இருந்து பலரும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியது தான் என்று கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தபோது, வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை காரணமாக மக்கள் தங்கள் குடியிருப்புகளை காலி சேடுத்துவிட்டு தங்கள் சொந்த மாவட்டங்களை நோக்கி பயணித்தனர். சில இடங்களில் காவல் துறையினர் பரிதாபப்பட்டு அவர்களை அனுப்பி வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இதனால் வரும் நாட்களில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் மருத்துவப் பணியாளர்களை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பணியமர்த்த வேண்டும். பிற மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் படுக்கை வசதியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க: லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பிற்கு உகந்தது ஃபேவிபிராவிர் மாத்திரை- DGCI ஒப்புதல்