உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமல், அடுத்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது என்பது சாத்தியமில்லை என்று ஜப்பான் மருத்துவ சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஜப்பான் அரசு போட்டிகளை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருது தெரிவித்துள்ள ஜப்பான் மருத்துவ சங்க தலைவர் யோஷிடேக் யோகோகுரா, கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமல், அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது சாத்தியப்படாது. ஜப்பான் அரசு ஒலிம்பிக்கை நடத்துமா என்பது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை ஆனால், கொரோனா பாதிப்பை வைத்துக் கொண்டு ஒலிம்பிக்கை நடத்துவது கடினமானது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க: என்னோட ஷூவுல அடிடாஸ்ன்னு நானே எழுதிக்கிட்டேன்..இன்று அடிடாஸின் பிராண்ட் அம்பாசிடர்.. ஹிமா தாஸ் உருக்கம்
கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகளை ஜப்பான் அரசு மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் யோகோகுரா கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை தவிர்க்க பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்து காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் குறித்த மருந்துகள் உருவாக்கப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு கொரோனாவிற்காக மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை பல்வேறு சோதனைகளை கடந்து, மக்களுக்கு எளிதாக கிடைக்க மேலும் கால தாமதம் ஏற்படும். இதனால் இன்னும் சில மாதங்களாவது கொரோனா பாதிப்பை சர்வதேச அளவில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: பார்வையாளர்கள் இல்லாமல் மூடப்பட்ட மைதானத்தில் 2020 ஒலிம்பிக் ஜோதி