கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ், ஓபிஎஸ் உள்பட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல அதிமுகவினர் செயல்பாடு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13 ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் 14 ஆம் தேதி உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) மூன்றாவது நாளாக பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்காக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூடியது.
முன்னதாக, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் காவல்துறையினர் ஆகஸ்ட் 17 அன்று மறுவிசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம், சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 18) எதிரொலித்தது.
அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் மு.அப்பாவு அனுமதி அளித்ததும், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறு விசாரணை செய்வது எதற்கு? என, எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதற்கு, பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல அதிமுகவினர் செயல்படுகின்றனர். இந்த வழக்கில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்படும். நீதிமன்ற அனுமதியுடன் தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது” என பேசினார்.
இதனையடுத்து, அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர், கலைவாணர் அரங்குக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
[su_image_carousel source=”media: 25769,25768″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு பின்னணி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில் 11 பேர் கொண்ட கும்பல் புகுந்தது.
அவர்களை அங்கிருந்த காவலாளி ஒம்பகதூர் தடுத்தார். இதனையடுத்து அந்த கும்பல் காவலாளியை தாக்கி கொலை செய்துவிட்டு பங்களாவிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த அவரது நண்பர் சயான் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சேலத்தில் நடந்த விபத்தில் கனகராஜ் பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது இவர்களில் 8 பேர் ஜாமீனிலும், சயான், மனோஜ் நிபந்ததை ஜாமீனில் வெளியில் வந்தனர்.
இந்த வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் மறுவிசாரணை நடத்த வேண்டும் எனவும், பல முக்கிய தகவல்களை கூற இருப்பதாகவும் சயான் தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது.
மேலும் காவல்துறையினர் இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை பெற வேண்டி உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சயானுக்கு கோத்தகிரி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 17) சயான் ஊட்டியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜரானார். சயானிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
[su_image_carousel source=”media: 25771,25770″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
சயான் தனது வாக்குமூலத்தில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரின் உத்தரவின்படி கொடநாடு பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை கடத்தி ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜிடம் ஒப்படைத்து விட்டதாகவும், கூடலூரை சேர்ந்த அதிமுக பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் சில நாட்களில் கனகராஜ் கார் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாலும், எஸ்டேட்டில் கணிப்பொறி உதவியாளராக வேலை பார்த்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாலும், தனது மனைவி மற்றும் குழந்தை கார் விபத்தில் இறந்ததாலும் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவியது.
அதன் காரணமாகவே இதுவரை முக்கிய தகவல்களை தெரிவிக்காமல் இருந்து வந்ததாகவும், தனக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளித்தால் இந்த வழக்கில் உள்ள அனைத்து விவரங்களையும் கூற தான் தயாராக இருப்பதாக வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சயான், முக்கிய அதிமுக பிரமுகர்களின் பெயர்களை தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அவர்களுக்கும் இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு உள்ளது, இவர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதாரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, அதில் அந்த பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் கூறும் தகவல்களையும், சயான் சொல்லிய தகவல்களையும் ஆராய்ந்து அதன்பின்னர் அதனை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க தொடங்கியுள்ளதுடன், ஆதாரங்களை திரட்டும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை முடிக்கப்பட வேண்டும்- உயர் நீதிமன்றம்