கேரளாவின் வடக்கு மாவட்டங்களான வயநாடு, மலப்புரம், கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது.
 
மழை நீடிப்பால் மாவட்டத்தின் மலை கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டன. வயநாடு மேப்பாடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
 
வீடுகள், ஆலயங்கள், மசூதிகள் மண்ணுக்குள் புதைந்தன. இதுபோன்று 8 மாவட்டங்களிலும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு, எங்கு பார்த்தாலும் மண்ணுக்குள் புதைந்தது போலவும், வெள்ளக்காடாகவும் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை உள்ளது.
 
ராணுவத்தினரும், மீட்பு படையினரும் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதுவரை காணாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
 
மழை, நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 1.66 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு மற்றும் மலப்புரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மக்கள் சிலர் சிக்கியுள்ளதாக கிடைத்த தகவலால் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
 
வெள்ள நிலைமை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினர்.