நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
 
இதனால், மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மழை ஓய்ந்தபோதிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பல்வேறு கிராமங்களும் தண்ணீரில் தத்தளிக்கிறது.
 
மழையால் பாதிக்கப்பட்ட 2,500 பேர், 135 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
 குன்னூர் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மலைரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் இருந்து நொய்யல் ஆறு உற்பத்தியாகி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக சென்று கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.
 
சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த ஒரத்துப்பாளையம் அணை இரண்டே நாளில் நிரம்பியது.
 
இதனால் அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு நீர் முழுமையாக வெளியற்றப்படுகிறது. இதனால் நொய்யலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
 
பல இடங்களில் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
நிலகிரியில் அவலாஞ்சிதான் பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் மழைப் பெய்யக் கூடிய இடம்தான் அவலாஞ்சி. ஆனால், இந்த வாரம் இங்கு பெய்த மழையின் அளவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்தது..
 
வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குட்பட்ட அதாவது இந்த ஒருநாளில் மட்டும், 91 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வெள்ளியன்று பதிவான இந்த அளவுதான், 100 ஆண்டுகளில் பதிவான அதிக மழையாகும் இது.
 
தமிழ்நாட்டில் மட்டும் இல்லை.. தென்னிந்தியாவிலேயே இதுதான் அதிக மழைப்பதிவு. இதன்மூலம்தான் ஒரேநாளில் நாட்டு மக்களை திசை திருப்பி உள்ளது அவலாஞ்சி. அதிலும் வானிலை நிபுணர்கள் எல்லோருமே அவலாஞ்சியின் ஒவ்வொரு மாற்றத்தையும் மிக உன்னிப்பாகவே கவனித்து வருகிறார்கள். 100 ஆண்டுகால சரித்திரத்தை அவலாஞ்சி உடைத்துள்ளதால், அதன் பாதிப்பும் அதிகமாகவே உள்ளது.
 
அவலாஞ்சி நீர் மின் நிலையம் அருகே 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் சிக்கிக் கொண்டார்கள்.
 
இவர்களால் நீண்ட நேரத்துக்கு வெளியே வரவே முடியவில்லை. பலர் வெளியேறிவிட்டாலும், 5 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் மட்டும் வெளியே வரமுடியாமல் போய்விட்டது.
 
இவர்களை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல், கடைசியில் மின் வாரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தனர். இதன்பேரில், தமிழக அரசு நேற்று ஒரு ஹெலிகாப்டரை அவலாஞ்சிக்கு அனுப்பியது. அங்கு ஹெலிகாப்டரில் வந்த மீட்பு படையினர் மக்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தார்கள்.
 

நிலகிரி எம்பி ராஜாவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில்  நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதனை போன்று நாகர்கோவிலில் பல இடங்களிலும் சாலைகள் குண்டு குழிகளாக மாறி வருகின்றன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
 
 நடுவட்டம் பகுதியில் மழையால் மண் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட சாலைகளை பார்வையிட்டார்.
 
மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் . மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.