ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
 
மேலும் போலீசார் நடத்திய தடியடியில் பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டு, ஆலைக்கு சீல் வைத்தது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
 
மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தாக்கல் செய்யும் அறிக்கைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 
இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. சீராய்வு மனு விசாரித்து வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று தனது அறிக்கையை 48 கவர்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
இந்நிலையில் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடைகோரிய மனு தள்ளுபடியான நிலையில் சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
ஆனால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பளார்களே எடப்பாடி தலைமையில் இயங்கும் அதிமுக தமிழக அரசு ஆலை நிர்வாகத்துக்கு  வேண்டுமென்றே எடுத்த மிதமான போக்கே உச்சநீதிமன்றத்தில்   மனுக்கள் தள்ளுபடி செய்ய காரணமாக அமைந்து உள்ளது என்று சோகமுடன்  கூறுகின்றனர்