கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 167 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுளள்ன. இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்துவருவதால் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். 21 குழுக்களாக கப்பற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுளளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கொச்சி விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்பட்டுள்ள நிலையில், கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் மறு அறிவிப்பு வரும் வரை இருகாது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல் ரயில் போக்குவரத்து, பேருந்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். கேரள முதல்வரின் கோரிக்கையை ஏற்று மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப விமானப்படை அதிகாரிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி- கல்லூரிகளுக்கு 28-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.