இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, திடீரென டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் அனைத்து விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதன்படி தற்போதய உலகக்கோப்பை டி20 தொடர் வரை மட்டுமே கோலி கேப்டனாக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள செய்தியில், நீண்ட காலமாக மூன்றுவிதமான ஃபார்மட்களிலும் ஆடி வருவதோடு கேப்டன்சியும் செய்து வருவதால் அதிக வேலைப்பளு உருவாகியுள்ளது. அதை சமாளித்து பேட்டிங்கில் கவனம் செலுத்தவே டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
கோலி இப்படி ஒரு முடிவை அறிவிக்கப்போகிறார் என சில நாட்களுக்கு முன்பே ஒரு பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அப்போது பிசிசிஐ சார்பில் அந்த செய்தி வதந்தி என கூறப்பட்டது. ஆனால், நான்கைந்து நாட்களிலேயே அந்த செய்தி உண்மையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீராட் கோலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து மாபெரும் வெற்றியொடு கோலி கேப்டன் பதவியை துறக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் டி20 போட்டிகளில் இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.