2020 ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்க காலத்தில் நாடு முழுவதும் சைபர் குற்றங்கள், கள்ள நோட்டு புழக்கம், கொலை, குடும்ப தகராறு மற்றும் சுற்றுச்சூழல் கேடு போன்றவை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் 2020 ஆம் ஆண்டுக்கான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவது கடந்த 2020 ஆம் ஆண்டு 66,01,285 குற்றங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த 51,56,158 குற்றங்களை காட்டிலும் 28% அதிகம் ஆகும். ஒரு லட்சம் பேருக்கு 385.5 ஆக இருந்த குற்ற விகிதம், 487.8 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா முதல் அலை காரணமாக நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு பொது போக்குவரத்து குறைந்த அளவே இருந்தது. இந்த காலகட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவையும் குறைந்துள்ளன.

அதேநேரத்தில் கொலை, குடும்ப தகராறு, சைபர் குற்றங்கள், கள்ள நோட்டு புழக்கம், சுற்றுச்சூழல் கேடு போன்றவை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. இது 2019 ஆம் ஆண்டை விட 11.8% அதிகமாகும். இந்த சைபர் குற்றங்களில் அதிகபட்ச சைபர் குற்றங்கள் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 11,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது.

அதேபோல் கர்நாடகாவில் 10,741 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 5,496 வழக்குகளும், தெலங்கானாவில் 5,024 வழக்குகளும், அசாமில் 3,530 வழக்குகளும் பதிவாகியுள்ளது என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் 8,34,947 கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.92.18 கோடியாகும். நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் கொரோனா காலத்தில் 130.5 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு நாடு முழுவதும் 29,193 கொலைகள் நடந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 28,915 ஆக இருந்தது. அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 3,339 பேரும், பீகாரில் 3,095 பேரும், மஹாராஷ்டிராவில் 2,229 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தானிலும் அதிகப்படியானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1,741 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.