சென்னை ஷெனாய் நகரில் மாநகராட்சியின் நிலம் ஆக்ரமிக்கப்பட்டதாக லட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது என்று கூறினார்.
மேலும், சட்டவிரோத ஆக்ரமிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சியிடம் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆக்ரமிப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.சென்னை மாநகராட்சியில் இருக்கும் ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்புக் குழுவின் பணி என்ன? மாநகராட்சிக்குள்ளும் மாநகராட்சிப் பகுதிக்கு உள்ளேயும் லஞ்சத்தை ஒழிக்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் சொத்து வரி நிலுவையை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மக்களுக்கான பணிகளை செய்வதற்காக லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சி எல்லைக்குள் விதிகளுக்கு உட்பட்டு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுகிறதா? மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய எஸ்.எம். சுப்ரமணியம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பில் அதிரடியாக சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும்
டிஜிபியுடன் கலந்து ஆலோசித்து புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதிகாரிகளை இடம்மாற்றம் செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடபட்டு உள்ளது. இது தவிர மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து கணக்கை ஆய்வு செய்யவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவு உள்ளாட்சி தேர்தலை தள்ளி போட்டு வருகிற அதிமுக தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்