குட்கா வழக்கில் 5 உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்புக்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிபிஐ கைப்பற்றியிருப்பதால் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் குட்கா ஆலை அதிபர் மாதவராவ் ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
அதன்படி கடந்த இரண்டு தினங்களாக ஜெயக்குமார் நுங்கம்பாக்கத்தில் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 100 கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றனர். அப்போது குட்கா வழக்கில் தம்மை சிக்க வைத்த 5 உயர் போலீஸ் அதிகாரிகள் குறித்து ஜெயக்குமார் சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த போது மாதவராவ் குடோனில் சோதனைக்கு உத்தரவிட்ட உயர் போலீஸ் அதிகாரி யார்? குடோனில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டது?, சிபிஐ அதிகாரிகளிடம் ஜெயக்குமார் தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் குட்கா லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகளை வளைக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.