நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் மீதான முறைகேடு புகார் உறுதியானதால், 20,000 டன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் கோரி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 20,000 டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய முந்தைய அதிமுக ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டது. இதனையடுத்து நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.
இந்த டெண்டரில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.100க்கும் குறைவாக விற்கப்படும் நிலையில், ரூ.143க்கு கிறிஸ்டி நிறுவனம் டெண்டர் எடுத்திருந்தது. கூடுதல் விலைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என அறப்போர் இயக்கம் தொடர்ந்து புகார் எழுப்பி இருந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதிகாரிகள் மற்றும் கிறிஸ்டி நிறுவனம் கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுதாதேவி ஐஏஎஸ் கடந்த வாரம் மாற்றப்பட்டார்.
பின்னர் முறைகேடு புகார் உறுதியானதையடுத்து கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய டெண்டர் கோரியதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் கிறிஸ்டி நிறுவனத்தன் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. குறிப்பாக சத்துணவு திட்ட முட்டை கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கிருஷ்டி நிறுவனம் தொடர்புடைய வழக்கில் வருமானவரி சோதனையில் சிக்கிய நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் சுதாதேவி ஐஏஎஸ், 3 ஆண்டுகளுக்கு பிறகு அப்பதவியிலிருந்து கடந்த 14 ஆம் தேதி நீக்கப்பட்டார்.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் கிறிஸ்டி நிறுவனத்தின் முறைகேடு கூறித்து புகார் தெரிவித்திருந்தோம். மேலும் துவரம் பருப்பு டெண்டர் விடக்கூடாது என்றும் தெரிவித்தோம். ஆனால் இறுதியில் டெண்டர் விடப்பட்டது. தற்போது தமிழக அரசு இந்த டெண்டரை ரத்து செய்துள்ளது பாராட்டத்தக்க ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.
கேரளா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சரானார் பெண் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ்