பிளஸ்-2 தேர்வில், 600-க்கு 600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தான் பெற்ற தங்கப் பேனாவை நேரில் சென்று பரிசளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று (08.05.2023) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில், மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து, “ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது.
எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன் திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன் உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!” என்று குறிப்பிட்டுள்ளார்.