மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லையென மக்களவையில் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். . ஜூன் 24, 2008 இல், அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சரால் மு. கருணாநிதியால் இத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது . இந்த திட்டத்தைச் செயல்படுத்த முதல் கட்டமாக மாயனூரில் காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், பாராளுமன்றத்தில், ‘‘தமிழகத்தில் உள்ள காவிரி மற்றும் வைகை நதிகள் சீரமைப்பிற்காக மத்திய அரசு சார்பில் உள்ள திட்டங்கள் என்ன’’ என கேள்வி எழுப்பினார்.
 
இக்கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை, சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சர் ரத்தன்லால் அளித்துள்ள பதிலில் கூறிய விவரம் பின்வருமாறு:
 
மத்திய நதிநீர் பாதுகாப்பு இயக்குநரகத்தின் சார்பாக தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை நதி சீரமைப்பிற்காக மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய நீர்வள அமைச்சகம் அனைத்து நிதி உதவிகளையும் செய்து வருகிறது.
 
மத்திய தேசிய ஆறுகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காவிரி நதிநீர் சீரமைப்பிற்காக ரூ.616.87 கோடி கர்நாடக அரசுக்கும், வைகை அணை சீரமைப்பிற்காக தமிழகத்திற்கு ரூ.120 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இந்த தொகை ஆறுகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கும், குறைந்த செலவிலான மின்சார உபகரணங்கள் வாங்குவதற்கும், ஆறுகளின் அருகில் மின்தகன மயானங்கள் அமைப்பதற்கு பதிலாக விறகினால் எரியூட்டும் மயானங்கள் அமைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இப்பணிகள் தேசிய நதிநீர் பாதுகாப்புத்திட்டம் மற்றும் தென்னிந்திய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
மேலும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம் தேசிய குடிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த இணைப்புத்திட்டம் 2,252 மி.க.அடி நீரை கட்டலை கால்வாயிலிருந்து பிரித்து 255.60 கி.மீ தூரத்திற்கு கால்வாய் மூலமாக புதிதாக 3.38 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களுக்கு கூடுதல் நீர்ப்பாசன வசதியை அளிக்கும்.
 
இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகள் பயனடையும்.
 
ஆனால், தற்போது காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்திட்டம் குறித்து மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இத்திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.
 
முன்னதாக இரண்டு வாரம் முன்பு காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இது சம்பந்தமாக ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் பெரம்பலூர்  எம்.பி.பாரிவேந்தர் நேரில் மனு அளித்தார்.
 
அங்குள்ள விவசாயிகள் இடம் தமிழ் ஸ்பெல்கோ சேகரித்த தகவல் விவரம் பிவருமாறு :
 
தற்போது வைகை அணைக்கு மூல வைகையில் இருந்து தண்ணீர் வருவது இல்லை. முல்லைப் பெரியாறு அணையில் இருந்துதான் தண்ணீர் வருகிறது.
 
2018 ஆண்டில் காவிரி ஆற்றில் கரை புரண்டோடிய 172 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து விட்டது .  மழைக் காலத்துக்கு முன்பாகவே முறையான திட்டமிடல், தூர்வாரல் பணிகளை மேற்கொண்டிருந்தால் காவிரி ஆறு பயணிக்கும் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கண்மாய்களில் நீரை நிரப்பி 3 ஆண்டுகளுக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தி இருக்க முடியும்.
 
மேலும் திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டியும் கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி – வைகை- குண்டாறு திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் இருந்து தப்பித்து பயன்பெற்று இருக்கும்.
 
. எனவே காலம் தாழ்த்தாமல் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் உள்ளுர் விவசாயிகள்..