கர்நாடகாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரியில் தமிழகத்துக்கு 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
 
கேரள, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
 
கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை நிரம்பியுள்ளதால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பிற்பகல் நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து 3 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏறபட்டுள்ளது.
 
காவிரியில் அமைந்துள்ள பிற அணைகளும் நிரம்பியதால் உபரிநீர் தமிழகத்திற்கு வருகிறது. கர்நாடகாவில் இருந்து மொத்தமாக தமிழகத்துக்கு 3 லட்சம் கனஅடி வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 
ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு ஒன்றரை லட்சம் கனஅடி நீர் வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது.
 
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.
 
நேற்று காலை அணையில் நீர் இருப்பு 22 டிஎம்சி.யாக இருந்தது. இன்று 30.59 டிஎம்சி.,யாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல்துறைகளில் படகு போக்குவரத்து இன்று 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
இதனால் சேலம் மாவட்டம் கொளத்தூர், மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தர்மபுரி மாவட்டம் நெருப்பூர், நாகமரை, ஒட்டனூர் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
 
மீனவர்கள் 2வது நாளாக மீன்பிடிக்க காவிரிக்கு செல்லவில்லை. தங்களின் முகாம்களில் முடங்கி கிடக்கின்றனர். காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை காண ஏராளமான பொதுமக்கள் பரிசல் துறைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
 
காவிரி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெரிய பெரிய மரங்களை விறகிற்காக கிராம மக்கள் சேகரித்து சென்றனர். செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி, சேத்துகுழி, சின்னமேட்டூர் உள்ளிட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா, ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வலதுகரை, இடது கரை பகுதிகளில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு, நீர்வரத்து குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் பல்வேறு துறையினர் அடங்கிய சிறப்பு குழுக்கள், பயிற்சி பெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்கள் மற்றும் நபர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.
 
நீர்வரத்து இதேநிலையில் இருந்தால் ஒரு வாரத்தில் மேட்டூர் அணை நிரம்பும். காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதையொட்டி, உபரிநீர் போக்கி மதகுகளை பராமரித்து வர்ணம் தீட்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.