அரசு நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் ஏழைகளின் கஷ்டங்களை புரிந்துகொள்ள அனைத்து நீதித்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கும் ‘காலா’ திரைபடத்தை திரையிட்டு காட்ட உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 24 குடும்பங்கள் 10 வருடங்களாக வசித்து வந்துள்ளனர்.

மின் இணைப்பு, ரேசன்கார்டு, வாக்காளர் அட்டை, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு அங்கு வசித்து வந்தவர்களை அப்புறப்படுத்திவிட்டு இடத்தை குடிசைமாற்று வாரியம் கையகப்படுத்தி கொண்டது.

இதைத்தொடர்ந்து, மாற்று இடம் வழங்கக்கோரி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதில் எட்டு பேருக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டது. எனவே தங்களுக்கும் மாற்று இடம் ஒதுக்கக்கோரி அங்கு வசித்து வந்த ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், “நிலம் எங்கள் உரிமை” என்ற கருத்து காலா படத்தில் வலியுறுத்தப்படுவதால் நிலம் இல்லாதவர்களின் கஷ்டங்களை நீதித்துறை புரிந்துகொள்ள, பிரதமர் அலுவலகமும் சட்ட அமைச்சகமும் இணைந்து நாட்டில் உள்ள மாஜிஸ்திரேட்கள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை காலா படத்தை பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் காலா போன்ற ஒரு தலைவர் இல்லாததாலேயே தங்கள் நிலங்களை பாதுகாக்க முடியவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.