96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து மீது கார்த்திக் நேத்தா, திருட்டுப் புகார் கூறியிருப்பது திரை உலகில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி பிரபலமான 96 படத்திற்குப் பாடல்கள் எழுதியவர் கார்த்திக் நேத்தா. அப்படத்தின் பாடல்கள் பாராட்டைப் பெற்றதால் அனைவரது கவனத்தையும் பெற்ற கார்த்திக், தற்போது பல படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இளம் பாடலாசிரியரான இவர், கவிஞர் வைரமுத்து மீது திருட்டுப் புகார் கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா படத்தில் வெற்றி பாடலாக அமைந்த “சரசர சாரக்காத்து வீசும்போது” என்ற பாடலை தான் எழுதியதாகவும், அப்பாடலின் சில வரிகளை மட்டும் மாற்றி விட்டு தான் எழுதியது போல வைரமுத்து பயன்படுத்திக் கொண்டதாகவும் கார்த்திக் நேத்தா பகிரங்கப் புகார் கூறியுள்ளார்.

பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர், “வைரமுத்து தான் மிகவும் மதிக்கும் கலைஞர். ஆனால் இதைப் போல பல பாடலாசிரியர்களின் பாடல்களை தனது பெயரில் அவர் போட்டுக் கொள்கிறார்” என குற்றம் சாட்டியுள்ளார்.

வைரமுத்துவுக்கு அவரது மனைவி தான் பாடல்களை எழுதிக்கொடுக்கிறார் என பல ஆண்டுகளாக பரவிவரும் குற்றச்சாட்டுடன் கார்த்திக் நேத்தாவின் திருட்டு புகாரும் சேர்ந்து தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.