தமிழ்நாடு முதல்வர், திமுக எம்பி உள்ளிட்டோரை அவதூறாக பேசிய கன்னியாகுமரி மாவட்ட பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பாஜகவின் 42வது துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இரணியலை சேர்ந்த பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் முகம் சுழித்தனர். மேலும் இதனை திமுகவை சேர்ந்த சிலர் தட்டி கேட்டதால், திமுக மற்றும் பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து கலைஞர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து அவதூறாக பேசிய பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் மீது திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், பாஜக மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் மீது, உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் ஆரல்வாய்மொழி காவல்துறையினர், ஜெயபிரகாஷை இரணியலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். தகவல் அறிந்த பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆரல்வாய்மொழி காவல் நிலையம் முன் திரண்டதை தொடர்ந்து ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஜெயபிரகாஷ் மருத்துவப் பரிசோதனைக்கு பின், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.