மும்பை வீரரால் நான் இறந்திருப்பேன் என யுஸ்வேந்திர சாஹல் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். இதற்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் 2013 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சாஹல், அதன் பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மாறினார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் யுஸ்வேந்திர சாஹல் இதுவரை சிறப்பாக பந்து வீசியுள்ளார். இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய சஹால், 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

சாஹல் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமல்ல, எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணமும் உடையவர். டிக்டாக் வீடியோக்கள் நிறைய செய்துள்ளார். நன்றாக பாடுவார், நடனம் ஆடுவார். ஜாலியான மனிதர்.

இந்நிலையில், கருண் நாயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் சாஹல் ‘கம்பாக் ஸ்டோரிஸ்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது பழைய சம்பவம் ஒன்றைக் கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார் யுஸ்வேந்திர சாஹல்.

அதில் சாஹல் பேசியதாவது, “2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் நான் மும்பை அணியில் இடம் பெற்று இருந்தேன். பெங்களூரில் ஒரு போட்டி. அப்போது விடுதியில் நாங்கள் தங்கியிருந்தபோது சக வீரர் ஒருவர் குடிபோதையில் இருந்தார். தன்னிலையிலேயே அவர் இல்லை. அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை.

அவர் திடீரென என்னை தூக்கி 15வது மாடி பால்கனியில் இருந்து கீழே தொங்க விட்டார். எனக்கு உயிரே போனது போல ஆகிவிட்டது. அன்று சிறிது தவறி இருந்தாலும் என் உயிர் போயிருக்கும். அங்கிருந்தவர்கள் தான் என்னை காப்பாற்றினார்கள்.

இந்த சம்பவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது, நாம் எங்கிருந்தாலும், என்ன நிலையில் இருந்தாலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதே. அந்த சமயத்தில் நானோ அல்லது அந்த வீரரோ சிறு தவறு செய்திருந்தாலும் எனது உயிரே போயிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை ராஜஸ்தான் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாஹல் உயிருடன் விளையாடிய அந்த வீரர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் ஆராய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று வெளியிட்டார். அதில், “குடிபோதையில், சாஹலிடம் அவ்வாறு நடந்து கொண்டது யார் என்பது தெரிவது மிகவும் முக்கியம். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இதனை வேடிக்கையாக கருதமுடியாது.

மேலும் அந்த வீரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறியவேண்டியது உள்ளது” என்று பதிவிட்டார். ஆனால் ட்விட் செய்த சில மணி நேரம் கழித்து அவர் அந்த பதிவை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.