கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க மாநில மனிதஉரிமை ஆணையம் முடிவு செய்துள்ளதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் அதிர்ச்சியடைந்ததாகவும், விசாரனை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஆணையம் உதவி செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
மனிதஉரிமை ஆணையம் அதிரடியை தொடர்ந்து கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் செலுத்தியது மிகுந்த மனவேதனை, அதிர்ச்சியளிக்கிறது என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் விரும்பும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் எங்கு தவறு நடந்திருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால், கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே HIV ரத்தம் ஏற்றப்பட்ட விவாகாரத்தில், ஆய்வக நிபுணர் உள்ளிட்ட 3 பேரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, ரத்த குறைபாடு இருந்ததால் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பரிசோதனை செய்தபோது, அந்த பெண்ணுக்கு HIV-யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்பட்டதும், சிவகாசி ரத்த வங்கியில் இருந்து அந்த ரத்தம் பெறப்பட்டதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய பிறகே, தனது மருமகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் தங்களை கையெழுத்து போட சொல்லி வற்புறுத்தியதாகவும் கர்ப்பிணியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.