சிபிஐ, காவல்துறை மீதான மக்களின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

டெல்லியில் சிபிஐ நிறுவப்பட்ட தினமான நேற்று (1.4.2022) சிபிஐ அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழாவில், ‘புலனாய்வு அமைப்புகளின் பங்கு மற்றும் பொறுப்புகள்’ என்ற தலைப்பில் பேசிய இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “காவல்துறையினர், சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் மக்களின் நம்பிக்கையை பெறுவது காலத்தின் கட்டாயம்.

மக்களுக்கு பிரச்சினை ஏற்படும்போதும் இடரான காலங்களிலும் காவல்நிலையங்களுக்கு செல்லத் தயங்குகின்றனர். லஞ்சம் ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், நடுநிலை தவறுதல் மாற்று,மற்றும் அரசியல் பின்னணியில் காவல்துறையினர் இருப்பதால் மக்களின் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கின்றனர்.

நம்மைப் போன்ற பன்மைத்துவ சமூகத்திற்கு ஜனநாயகம் மிகவும் பொருத்தமானது என்பதை இந்தியாவின் இதுவரையான அனுபவம் நிரூபித்துள்ளது. சர்வாதிகார ஆட்சியின் மூலம் நமது வளமான பன்முகத்தன்மையை நிலைநிறுத்த முடியாது.

சிபிஐ அதன் ஆரம்ப கட்டத்தில் பொதுமக்களிடம் அபரிமிதமான நம்பிக்கையைப் பெற்றிருந்தது. அதன் பாரபட்சமற்ற தன்மை மற்றும் சுதந்திரத்தின் சின்னமாக இருந்ததால், விசாரணைகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளால் நிரம்பி வழிந்தது நீதித்துறை.

குடிமக்கள் அதன் சொந்த மாநில காவல்துறையின் திறமை மற்றும் சார்பற்ற தன்மையை சந்தேகிக்கும் போதெல்லாம், அவர்கள் நீதிக்காக சிபிஐ விசாரணையை நாடினர்கள். ஆனால் காலப்போக்கில், மற்ற நிறுவனங்களைப் போலவே, சிபிஐயும் மக்களின் சந்தேகத்துக்கு உள்ளானது. அதன் செயல்களும் செயலற்ற தன்மையும் சில சந்தர்ப்பங்களில் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.

CBI, SFIO, ED போன்ற பல்வேறு நிறுவனங்களை ஒரே சுதந்திரமான தலைமையின் கீழ் கொண்டு வர, ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கான உடனடித் தேவை உள்ளது. இந்த அமைப்பு ஒரு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். அதன் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் அதிகார வரம்புகளை தெளிவாக வரையறுத்து, அத்தகைய சட்டம் மிகவும் தேவையான சட்டமன்ற மேற்பார்வைக்கு வழிவகுக்கும்” என்று நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.