கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடித்து வந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சண்டை காட்சி படமாக்க செட் அமைக்கும் பணிகளில் சண்டைக் கலைஞர்கள், தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். இதில் கிரேன்களில் ஏறி மின்விளக்குகளை பொருத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவியாளர் மது(29), உதவி இயக்குநர் கிருஷ்ணா(34), ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் ஆகியோர் உயிர் இழந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையே தலைமறைவாக உள்ள கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது நசரத்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்செய்தியை கேள்விப்பட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய வருத்தத்தையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.