கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பபுனீத் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் 1975ல் சென்னையில் பிறந்தவர். ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர். பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக ‘யுவரத்னா’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘ஜேம்ஸ்’, ‘த்வித்வா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பவர் ஸ்டார் புனித் 29 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார்.
இதனையடுத்து, இன்று (29.10.2021) காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
புனித் ராஜ்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் வெளியானவுடன், அங்கு ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர், உறவினர்கள், சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதால், மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு, கர்நாடக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் இதனையடுத்து, திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.