சிகிச்சை கட்டணம் செலுத்த முடியாத 80 வயது முதியவரை, தனியார் மருத்துவமனை நிர்வாகம் படுக்கையிலேயே கட்டிப்போட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், ஷாஜாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவர் முதலில் ரூ.5000 செலுத்தியுள்ளார். ஆனால், சில நாட்கள் சிகிச்சை முடிந்தும் அவர் செலுத்த வேண்டிய மீதி தொகை ரூ.11,000-ஐ செலுத்தும்படி மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக முதியவரின் மகள் கூறியுள்ளார்.
அந்த தொகையை செலுத்த முடியாததால் முதியவரை வீட்டுக்கு அனுப்ப மறுத்த மருத்துவமனை நிர்வாகம், படுக்கையிலேயே கை, கால்களை கட்டிப்போட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், முதியருக்கு நீண்ட நாள் வலிப்பு நோய் உள்ளதாகவும், இதனால் அவர் படுக்கையில் இருந்து விழுந்து கை மற்றும் கால்களை காயப்படுத்திக்கொள்ள கூடாது என்பதற்காகவே அவரை படுக்கையில் கட்டிவைத்ததாக கூறியுள்ளது.
மேலும் மனிதாபிமான அடிப்படையில் அவருடைய மருத்துவக் கட்டணத்தை தள்ளுபடி செய்ததாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த சம்பவதை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க: 8 வழிச்சாலை அமைப்பதில் அவசரம் காட்டும் மத்திய, மாநில அரசுகள்; வலுக்கும் போராட்டம்