கஜா புயல் சேதம் குறித்து தேவையான விளக்கம் அளித்தும் நிவாரண நிதி வழங்காமல் மத்திய அரசு மறுத்து தாமதித்து வருகிறது என்று தமிழக அரசு சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
 
கடந்த மாதம் 16ம் தேதி கஜா புயல் காரணமாக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கும்படி பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.
 
இதையடுத்து மத்திய அரசு குழுவினர் நேரில் ஆய்வு செய்துவிட்டு சென்று அறிக்கை அளித்தனர். ஆனால் கஜா புயல் பாதித்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை மத்திய அரசு நிவாரண நிதி எதுவும் அறிவிக்கவில்லை.
 
தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் திருமுருகன், மேலூர் வக்கீல் ஸ்டாலின், முருகேசன் உள்ளிட்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களில், ‘‘புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சத்துடன் அரசு வேலை வழங்கவேண்டும். தென்னைக்கு ரூ.50 ஆயிரம், நெல் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம், படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்,’’ என்று கூறியிருந்தனர்.
 
இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகெட் ஜெனரல் ஆஜராகி, ‘‘சேதம் தொடர்பாக மத்திய அரசு கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்து விட்டோம். ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் நிவாரண நிதி வழங்காமல் தொடர்ந்து மறுத்து தாமதித்து வருகின்றனர். மத்திய அரசு அதிகாரிகள் தான் ஆய்வு செய்தனர். அவர்கள் தான் அறிக்கை அளித்தனர். ஆனாலும், மத்திய அரசு தரப்பில் விளக்கங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்,’’ என்றார்.
 
மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, ‘‘தமிழக அரசின் விளக்கம் செவ்வாய்க்கிழமை (நேற்று முன்தினம்) பிற்பகலில் தான் கிடைத்தது. தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
 
குழுவின் ஒப்புதல் கிடைத்ததும், தேவையான நிதி வழங்கப்படும். தமிழக அரசிடம் பேரிடர் நிதி சுமார் ரூ.1200 கோடி உள்ளது. இதை வைத்து முதற்கட்ட நிவாரணத்தை வழங்கலாம். அதன் பின் மத்திய அரசின் நிதி கிடைத்ததும் பயன்படுத்தி கொள்ளலாம்,’’ என்றார்.
 
அப்ேபாது ஒரு வக்கீல், ‘‘மத்திய, மாநில அரசுகளிடையேயான போட்டியில் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். விரைவாக நிவாரணம் கிடைத்தால் தான் அவர்களின் மறுவாழ்வுக்கு பயன்படும்,’’ என்றார்.
 
இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழக அரசின் விளக்கத்தின் அடிப்படையில் நிதி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டு விசாரணையை வியாழன் ( நாளை) தள்ளி வைத்தனர்.
 
அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி தலைமையில் நேற்று நடந்த நாடாளுமன்ற நிதிக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், பரசுராமன், பாரதி மோகன், தமிழ்நாடு இல்ல ஐ.ஏ.எஸ்.அதிகாரி முருகானந்தம் மற்றும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை சார்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
 
மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்ற நிதிநிலை குழு உறுப்பினர்கள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
சுமார் மூன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு நடந்து ஒரு மாதம் ஆகியும் மீட்பு பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுகுறித்த அறிக்கையும் நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.