தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலையை நிறுவி, அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்போம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. தற்போது வரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உள்ளது.

இந்நிலையில் தொடரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் அன்று கொண்டாடப்பட உள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைளில் கரைப்பதோ, அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அனுமதிக்கப்படுகிறது.

மேலும் சிறிய கோவில்களில் பொது மக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும் போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொது மக்களும் திருக்கோவில் நிர்வாகமும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் இதுகுறித்து கூறும்போது, தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதித்திருப்பது ஏற்க முடியாதது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அதிமுக அரசு அனுமதி வழங்க வேண்டும்,

இல்லையெனில் தமிழக அதிமுக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் மனித இடைவெளியை உறுதி செய்து 1.5 லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவி, இந்து முன்னணி சார்பாக வழிபாடு நடத்தப்படும். பின்னர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்போம் என்று இந்து முன்னணி அரசுக்குச் சவால் விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க: ரூ15 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ அபின்; சிக்கிய பாஜக நிர்வாகி…